தர்மபுரி
மனைவி உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
|பெரும்பாலை அருகே எரிந்த நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தது குறித்து மனைவி உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்:
பெரும்பாலை அருகே எரிந்த நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தது குறித்து மனைவி உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
எரிந்த நிலையில் தொழிலாளி பிணம்
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே நரசிபுரம் சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தீயில் எரிந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ேபாலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வாலிபர் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி மணி (வயது 30) என்பதும், இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளதும் தெரியவந்தது. மேலும் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு தீவைத்து எரித்தது தெரியவந்தது.
5 பேரிடம் விசாரணை
இதையடுத்து ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் மணியின் மனைவி மற்றும், மாமியார் உள்பட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலையாளி பெங்களூருவில் பதுங்கி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் மணியின் மனைவி உள்ளிட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் கைது செய்யப்பட்டால் தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும். அவர் விரைவில் பிடிபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.