< Back
மாநில செய்திகள்
கொளத்தூர் அருகேமூதாட்டி கொலை வழக்கில் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

கொளத்தூர் அருகேமூதாட்டி கொலை வழக்கில் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
10 Sept 2023 2:09 AM IST

கொளத்தூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டூர்

கொளத்தூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூதாட்டி படுகொலை

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள ஏழு பரணி காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, விவசாயி. இவருடைய மனைவி அத்தாயம்மாள் (வயது 65). இவர்களுக்கு மல்லிகா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். மல்லிகா திருமணம் ஆகி கொளத்தூரிலும், பிரகாஷ் அய்யம்புதூரிலும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 7-ந் தேதி அதிகாலை வீட்டிற்கு வெளியே படுத்திருந்த அத்தாயம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவருடைய கணவர் ராமசாமி அக்கம் பக்கத்து வீட்டினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கொளத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனிப்படை அமைப்பு

இது குறித்து தகவல் கிடைத்ததும், கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலனும் அங்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த கொலை குறித்து துப்பு துலக்க, மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மரிய முத்து (மேட்டூர்), ராஜா (சங்ககிரி), சங்கீதா (ஓமலூர்), ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மேட்டூர் சுப்பிரமணி, கொளத்தூர் தேவராஜ், மேச்சேரி சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உறவினர்களிடம் விசாரணை

போலீசாரின் விசாரணையில் தனது மகன் மற்றும் மகளுக்கு சொத்தை பிரித்துக் கொடுப்பதில் அத்தாயம்மாளுக்கும், அவருடைய கணவர் ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த கொலையில் அவர்களுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? அல்லது வயதான தம்பதியிடம் பணம் இருப்பதை தெரிந்து யாராவது அவர்களிடம் உள்ள பணத்தை கொள்ளையடித்து செல்லும் நோக்கத்தில் கொலையை செய்துள்ளார்களா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகளை பிடித்து வந்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்