சேலம்
சேலம் சிறை வார்டர் செல்போனில் தொந்தரவு செய்தாரா?நாமக்கல் கைதியின் மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு
|சேலம்
நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க அவரது மனைவி சேலம் சிறைக்கு வந்தபோது, சிறையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 28 வயதுடைய வார்டர் ஒருவர், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி வாட்ஸ்-அப் காலில் தொடர்பு கொண்டு அவருக்கு தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வார்டரின் செல்போன் எண் சேலம் சைபர் கிரைம் போலீசாரின் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது சிறை வாரிடரின் செல்போன் எண்ணில் இருந்து அவர் வேறு யாரிடம் இதுவரை பேசியுள்ளார்? என்ற விவரம் சேகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் சேலம் மத்திய சிறைக்கு சைபர் கிரைம் போலீசார் அனுப்பி வைத்ததால் அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மத்திய சிறை வார்டர் மீது நாமக்கல்லை சேர்ந்த கைதியின் மனைவி புகார் கூறியதால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் கூறியது உண்மையா? அல்லது வார்டரை சிக்க வைக்க பொய் கூறுகிறாரா? அவரிடம் உள்ள ஆதாரத்தை எடுத்துக்கொண்டு சேலம் மத்திய சிறைக்கு வந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அளிக்கும் தகவலை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு வினோத் தெரிவித்துள்ளார்.