< Back
மாநில செய்திகள்
ரூ.58 கோடி மோசடி வழக்கில்அமுதசுரபி நிறுவன மேலாளரை காவலில் எடுத்து விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

ரூ.58 கோடி மோசடி வழக்கில்அமுதசுரபி நிறுவன மேலாளரை காவலில் எடுத்து விசாரணை

தினத்தந்தி
|
22 Aug 2023 1:41 AM IST

சேலம்

ரூ.58 கோடி மோசடி வழக்கில் அமுதசுரபி நிறுவன மேலாளரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

ரூ.58 கோடி மோசடி

சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கத்தின் நிர்வாகிகள் பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி ரூ.58 கோடி வரை மோசடி செய்ததாக சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அந்த நிறுவனத்தின் நிறுவன தலைவர் ஜெயவேல், நிர்வாகி தங்கப்பழம், இயக்குனர் சரண்யா, பொதுமேலாளர் பிரேம் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஜெயவேல் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் பொது மேலாளர் பிரேம் ஆனந்த் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

காவலில் எடுத்து விசாரணை

இதனிடையே, கோவை கோர்ட்டில் கடந்த வாரம் பிரேம் ஆனந்த் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் கோவை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். பின்னர் அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

இந்நிலையில், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரேம் ஆனந்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மணப்பாறையில் 7 பிளாட் வாங்கி இருப்பதும், நிர்வாகி தங்கப்பழத்திடம் ரூ.10 கோடி கொடுத்ததும் தெரியவந்தது. மேலும், இந்த மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே, நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் பிரேம் ஆனந்தை போலீசார் கோவை கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்