அம்பாசமுத்திரத்தில் விசாரணை அதிகாரி அமுதா நாளை விசாரணை
|நெல்லை ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரத்தில் நாளை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, சார் ஆட்சியர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம் உள்ளிட்ட மற்ற காவல் நிலையங்களிலும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட நெல்லை ஆட்சியர் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அம்பையில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணையை அமுதா ஐஏஎஸ் தொடங்க உள்ளார்.
ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரத்தில் நாளை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறும். உயர்மட்டக்குழு விசாரணை அதிகாரி அமுதா நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சாட்சிகளை விசாரிக்கிறார். பாதிகப்பட்டவர்களும், இதுவரை புகார் அளிக்காதவர்களும் நாளை நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.