திண்டுக்கல்
பாண்டியர் கால சுங்கச்சாவடி கண்டுபிடிப்பு
|நத்தம் அருகே பாண்டியர் கால சுங்கச்சாவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-நத்தம் சாலையில் என்.பி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அருகே சிதிலமடைந்த நிலையில் பழங்கால மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல்லை சேர்ந்த வரலாற்று ஆய்வுக்குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த குழுவில் வரலாற்று ஆய்வாளர்கள் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாற்று மாணவர்கள் ரத்தின முரளிதர், ஆனந்த், நடராஜன், உமாமகேஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வுக்குபின் அவர்கள் கூறியதாவது:-
இந்த மண்டபத்தில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர்கள் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் பாண்டியர் காலத்தில் அந்த வழியாக கொண்டு செல்லும் விளைபொருட்களுக்கு உள்ளூர் முத்திரை தீர்வை, வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொருட்களுக்கு பாதுகாப்பு கொடுப்பற்காக சிறுபடை பிரிவும் தங்க மண்டபத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மண்டபத்தின் உள்புற சுவரில் பிற்கால பாண்டியரின் சின்னமான இணை மீன்களும், மண்டப தூண்களில் சிவலிங்க சின்னமும், கும்பம், கொடி முல்லை ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. இவை பிற்கால பாண்டியர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளது. இந்த மண்டபத்தை தொல்லியல் துறை முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.