விழுப்புரம்
திட்டக்குழு உறுப்பினர்களின் அறிமுக கூட்டம்
|விழுப்புரம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளை சேர்ந்த 10 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும், பேரூராட்சி பகுதிகளில் ஒரு உறுப்பினரும், நகராட்சி பகுதிகளில் ஒரு உறுப்பினர் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அன்புசெழியன், விஜயன், புஷ்பவள்ளி, ஏழுமலை, பிரபு, முருகன், சிவக்குமார், கவுதம், தமிழ்செல்வி, விஸ்வநாதன், சித்திக்அலி, பாலாஜி ஆகியோரின் அறிமுக கூட்டம் மற்றும் முதல் கூட்டம் நேற்று மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேர்த்திடுவதில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டங்களை தேர்வு செய்து திட்ட மதிப்பீட்டை தயார் செய்து மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும், இதன் காரணமாக மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டப்பணிகள் கொண்டு வருவதற்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும், தற்போது பொறுப்பேற்றுள்ள அனைவரும் விழுப்புரம் மாவட்டம் மென்மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து செயலாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) குமார், கண்காணிப்பாளர் பாலச்சந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.