சென்னை மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்
|இனி சென்னை மாநகர பஸ்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் பெறலாம்.
சென்னை,
சென்னை மாநகரப்போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய (பிஎஸ்-VI) பஸ் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தனர்.
மேலும் டெபிட் கார்டு, யு.பி.ஐ. மூலம் பயணிகள் டிக்கெட் பெற வசதியாக மின்னணு டிக்கெட் இயந்திரத்தையும் நடத்துநர்களுக்கு வழங்கினர்.
யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பஸ்களில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பஸ்களில் கொண்டு வர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், பஸ்களில் நடத்துநர்கள் யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர். தொடுதிரை வசதி கொண்ட இந்த கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
மேலும், இக்கருவி மூலம் கார்டு மற்றும் யு.பி.ஐ., க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.