சென்னை
'கியூஆர் கோடு' வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
|கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் புதிய ஏற்பாடு கோவில்களில் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இணையதளம் மற்றும் கையடக்க கருவியின் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவை டிக்கெட்டை, ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கான 'கியூஆர் கோடு ஸ்கேன்' வசதியை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
530 கோவில்களில் 1767 கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கையடக்க கருவிகள் மூலம் கட்டணச் சீட்டுகள் வழங்கப்படுகின்ற போது கட்டணம் செலுத்தும் சேவை, எண்ணிக்கை மற்றும் அதற்கான கட்டணம் போன்ற விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் குரல் ஒலி செய்தியாக அறிவிக்கப்படுகிறது.
இணையதளம் மற்றும் கையடக்க கருவிகள் மூலம் வழங்கப்பட்ட கட்டண சேவைக்கானச் டிக்கெட்டை கோவில்களில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் 'கியூஆர் கோடு' ஸ்கேன் வசதியினை தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 530 கோவில்களில் ஒரு முறை விற்பனை செய்யப்பட்ட கட்டண டிக்கெட்டை மீண்டும், மீண்டும் உபயோகிக்க முடியாது.
பக்தர்கள் கோவிலின் தல வரலாறு மற்றும் ஆன்மிக குறித்த செய்திகளை அறிந்து கொள்கின்ற வகையில் 48 முதுநிலை கோவில்களில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்த இருக்கின்றோம். தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற செயலியை ஓரிரு நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
கோவில்களில் உண்டியல் எண்ணும்போது குற்றச்சாட்டுகள் ஏதும் ஏற்படாத வகையிலும், அதனை தடுக்கின்ற வகையிலும் உண்டியல் எண்ணுவதை இணையத்தில் நேரடியாக பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்னதான திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகா சிவராத்திரி விழாவை சென்னை, கோவை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நெல்லை ஆகிய 5 இடங்களில் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக பிப்ரவரி 22-ந் தேதி 62 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இந்த ஆன்மிக பயணத்துக்கான செலவு தொகை ரூ.50 லட்சத்தை அரசு மானியமாக வழங்கியுள்ளது.
அனைவரும் போற்றி மதிக்கக்கூடிய நமது தேசத்தின் உரிமைகளை, நிலைப்பாட்டினை எடுத்து கூறுகின்ற தேசிய கீதத்தை எந்த வகையிலும், யாரும் அவமதிக்க கூடாது என்பதுதான் அனைவரின் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை மண்டல இணை ஆணையர் கே.ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.