கரூர்
மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் அறிமுகம்
|அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனம் அறிமுகப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாகனத்தை கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இருந்து கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள 46 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்து வருகிறது. இதில், மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும், என்றார்.
முன்னதாக நேற்று அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு கலெக்டர் மாலை அணிவித்து அவர்களை வரவேற்று இனிப்பு மற்றும் பாட புத்தகங்களை வழங்கினார். இதில், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், மண்டல தலைவர் ராஜா உள்பட கலந்து கொண்டனர்.