< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் வசதி அறிமுகம்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் வசதி அறிமுகம்

தினத்தந்தி
|
10 Sept 2022 5:34 AM IST

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்காக விரைவில் பேட்டரி கார் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஊட்டி:

சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் ஏப்ரல் மற்றும் மே மாதங்களும், 2-வது சீசன் செப்டம்பர், அக்டோபர், மாதங்களிலும் நடக்கிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்துவிட்டு தான் செல்வார்கள்.

இதனால் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. உலகில் சில நாடுகளில் மட்டுமே காணப்படும் பல்வேறு வகை அரிய தாவரங்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளன. இங்குள்ள இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை பசுமை புல் வெளி சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது.

இதற்கிடையே சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து, 60 வகைகளில் பல்வேறு வகையான, 5 லட்சம் மலர்கள் தயார்படுத்துகின்றனர். தற்போது, 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் பூங்காவில் மேடான பகுதியில் உள்ள இத்தாலியன் கார்டன் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மலர்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் பூங்கா நிர்வாகம் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, 6 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய பேட்டரி கார் ஒன்று வாங்கி வெள்ளோட்டம் நடத்தினர். மேலும் மேலதிகாரிகளின் உத்தரவு வந்த பின், விரைவில் இயக்கப்படும் என, பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்