சென்னை
வண்ணாரப்பேட்டையில் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டல் - தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் கைது
|வண்ணாரப்பேட்டையில் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிய தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு மற்றும் ஜி.ஏ. சாலை பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. மொத்தம் மற்றும் சிறு வியாபாரம் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நடைபாதை மற்றும் சாலையோர கடைகளும் உள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனா என்பவருடைய கணவரான ஜெகதீசன் (வயது 32) என்பவர் நடைபாதை கடை வியாபாரிகளிடம் ஆட்களை அனுப்பி ஒரு நாளுக்கு ரூ.200 வீதம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், மாமூல் கொடுக்க தவறினால் சம்பந்தப்பட்டவரிடம் போன் செய்து மிரட்டுவதும் என பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து சாலையோர வியாபாரிகள், வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் அண்ணா நீேரற்று நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். வண்ணாரப்பேட்டை போலீசார் ேபச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
சாலையோர வியாபாரிகளின் இந்த சாலை மறியல் போராட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. மேலும் இதுபற்றி சாலையோர வியாபாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, ஜெகதீசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை ஜே.பி. கோவில் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
கைதான ஜெகதீசன், தனது மனைவி நிரஞ்சனா கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றபோது சாலையில் நின்று நண்பர்களுடன் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வண்ணாரப்பேட்டை ரோந்து போலீசாரிடம் ஜெகதீசன், தான் கவுன்சிலர் எனக்கூறி போலீசாரை மிரட்டியதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஏற்கனவே அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.