< Back
மாநில செய்திகள்
ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை அனுப்பி  எலக்ட்ரீசியனிடம் பணம் கேட்டு மிரட்டல்
சேலம்
மாநில செய்திகள்

ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை அனுப்பி எலக்ட்ரீசியனிடம் பணம் கேட்டு மிரட்டல்

தினத்தந்தி
|
21 Jun 2022 2:38 AM IST

ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை அனுப்பி எலக்ட்ரீசியனிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சேலம்,

சங்ககிரி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய எலக்ட்ரீசியன் ஒருவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 15 நாட்களுக்கு முன்பு எனது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு என்னை ஆபாசமாக சித்தரித்த புகைப்படம் ஒன்று வந்தது. இதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதைத்தொடர்ந்து எனது செல்போன் எண்ணுக்கு பேசிய மர்ம நபர்கள், இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினர். மேலும் அவர்கள் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இதனிடையே அவர்கள் அந்த புகைப்படத்தை உறவினர்கள் உள்பட பலருக்கு அனுப்பி உள்ளனர். எனக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நேரத்தில் ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய புகைப்படத்தால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மேலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உருவாகி உள்ளது.

எனவே இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்