திருப்பூர்
நேரடி முகவர்கள், கள அலுவலர் பணிக்கு நேர்காணல்
|அஞ்சல் துறையில் நேரடி முகவர்கள், கள அலுவலர்களாக பணியாற்ற நேர்காணல் வருகிற 19-ந் தேதி தாராபுரத்தில் தொடங்குகிறது.
நேரடி முகவர்கள்
அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக பணிபுரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளம் கிடையாது. பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதன்படி திருப்பூர் அஞ்சல் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி காலை 10 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. தாராபுரம் பகுதி மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நேர்காணல்
திருப்பூர் பகுதி மக்களுக்கு வருகிற 20-ந் தேதி திருப்பூர் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
நேரடி முகவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். அயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படைவீரர்கள், மகிலா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் பங்கேற்கலாம். கள அலுவலர்களுக்கு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் குரூப்-ஏ, பி அந்தஸ்தில் உள்ளவர்களின் மீது துறை ரீதியாக எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.
வைப்புத்தொகை
ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் அந்தந்த அலுவலகத்துக்கு தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேரடி முகவர்கள், கள அலுவலர்களாக திருப்பூர், மேட்டுப்பாளையம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிய வேண்டும். ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
----