< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர் பணிகளுக்கு நேர்காணல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர் பணிகளுக்கு நேர்காணல்

தினத்தந்தி
|
16 Dec 2022 12:15 AM IST

நாகர்கோவிலில் நடைபெற்ற ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க 1000 பேர் குவிந்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடைபெற்ற ரேஷன் கடை விற்பனையாளர், கட்டுனர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க 1000 பேர் குவிந்தனர்.

நேர்காணல்

குமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் 117 விற்பனையாளர்கள், 17 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி பிளஸ்-2 ஆகும். கட்டுனருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் 134 பதவிகளுக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளருக்கான நேர்காணல் நாகர்கோவிலில் உள்ள டதி பள்ளியில் நேற்று தொடங்கியது. நேர்காணலில் பங்கேற்க காலையில் 500 பேருக்கும், மாலையில் 500 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி காலையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்பதற்காக நேற்று காலை 500 பேர் வந்திருந்தனர். பின்னர் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த சாமியான பந்தலில் அவர்கள் காத்திருந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

முதலில் சான்றிதழ் சரிபார்க்கபட்ட பிறகு நேர்காணல் நடந்தது. ரேஷன் கடையில் விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி பிளஸ்-2 என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பட்டதாரிகளும், என்ஜினீயர்களும் விண்ணப்பித்து நேர்காணலுக்கு வந்திருந்தனர். இதே போல கட்டுனருக்கான நேர்காணலுக்கும் பட்டதாரி பெண்கள் வந்திருந்தனர்.

இந்த நேர்காணலானது இந்த மாதம் 29-ந் தேதி வரை நடக்கிறது. வருகிற 18, 24, 25 ஆகிய தேதிகள் மட்டும் விடுமுறை தினங்களாகும். மற்ற நாட்களில் தினமும் காலை 500 பேருக்கும், மாலை 500 பேருக்கும் நேர்காணல் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்