< Back
மாநில செய்திகள்
சேலத்தில் ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு
சேலம்
மாநில செய்திகள்

சேலத்தில் ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு

தினத்தந்தி
|
20 Dec 2022 3:34 AM IST

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு சேலத்தில் நடந்து வருகிறது. இந்த பணியை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் நேரில் ஆய்வு செய்தார்.

நேர்முகத்தேர்வு

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சேலம் அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவு சமுதாய கூடத்தில் கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 236 விற்பனையாளர்கள், 40 கட்டுனர்கள் காலி பணியிடங்களுக்கு சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தினமும் காலையில் 875 பேரும், மாலையில் 875 பேருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பி வைத்து தினமும் 1,750 பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.. இந்த நேர்முகத்தேர்வு வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இணைப்பதிவாளர் ஆய்வு

இந்த நிலையில், சேலம் அழகாபுரம் கூட்டுறவு சமுதாய கூடத்தில் நடந்து வரும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு பணியை நேற்று சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், விண்ணப்பதாரர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? நேர்காணலுக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் நாற்காலி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்துள்ள பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்திருப்பதை பார்வையிட்டார்.

29-ந் தேதி வரை

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை நகல்கள் எடுப்பதற்கு வசதியாக நேர்காணல் மையத்திலேயே ஜெராக்ஸ் எந்திரம் வசதி, செல்போன் எண்களை ஒப்படைப்பதற்கான பாதுகாப்பு பெட்டக வசதி, சான்றிதழ் சரிபார்ப்பு குழு எண்கள் தொடர்பான பிளக்ஸ் பேனர் மற்றும் விண்ணப்பதாரர்கள் அளிக்க வேண்டிய சான்றிதழ்கள் குறித்த அறிவிப்பு தட்டி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் ஆய்வு செய்தார். வருகிற 29-ந் தேதி வரை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த நேர்காணலுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்