< Back
மாநில செய்திகள்
2 வருடங்களுக்கு பிறகு ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
24 Jun 2022 1:38 PM IST

அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நேர்காணல் நடைபெறவில்லை. தற்போது அரசாணைப்படி ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி இந்த ஆண்டிற்கான நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் மின்னணுவில் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிக்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.


இதேபோல், அஞ்சல் துறை, இ-சேவை மையம், ஓய்வூதியர் சங்கம் மற்றும் கருவூல முகாம் சேவையை பயன்படுத்தி மின்னணுவில் வாழ்நாள் சான்று பதிவு செய்து நேர்காணலில் பங்கு பெறலாம். ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்திலிருந்து பதிவேற்றம் செய்து ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளரிடம் கருவூலத்திற்கு அனுப்பி நேர்காணல் செய்யலாம் அல்லது தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலகர், மேஜிஸ்ட்ரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.

மேலும், ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்