கிருஷ்ணகிரி
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி
|அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
தி.மு.க. அரசை கலைக்க பா.ஜ.க.வுக்கு நிர்பந்தம் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
தவறான தகவல்கள்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசை கலைக்க பா.ஜனதாவுக்கு நிர்பந்தம் கொடுத்தோம் எனவும், அதனால் தான் கூட்டணி முறிந்தது எனவும் தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பக தன்மையற்றவர் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., காங்கிரஸ் என அவர் சென்ற இடங்களில் யாருக்கும் விசுவாசமாக இல்லை. தங்களுடைய சுயலாபத்திற்காக கொள்கையை விற்று ஆதாயம் தேடும் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். நம்பகத்தன்மையற்றவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தான்.
முன்னாள் அமைச்சர் கருப்பணன்
பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை 2026-ம் ஆண்டு தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக்க வேண்டும் என பா.ஜனதா கோரிக்கை வைத்ததாக முன்னாள் அமைச்சர் கருப்பணன் பேசி உள்ளார். சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் திரும்ப, திரும்ப வரும்போது அந்த கருத்துகள் மனதில் பதிந்து, மேடையில் உண்மை நிலை மறந்து இவ்வாறு கருத்துகளை சொல்வது இயல்பு. கருப்பணன் அவ்வாறு தான் பேசி இருக்கிறார். 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு.
வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் எந்த அளவில் பா.ஜனதாவை ஏற்றுக்கொள்கிறார்கள் என அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். அ.தி.மு.க. குறித்து பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா கண்மூடித்தனமாகவும், கீழ்தரமாகவும் பேசுகிறார். எச்.ராஜா நாங்கள் விரல் காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர். மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்களிடத்தில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது தெரியும்.
அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்
மத்திய பா.ஜனதா அரசு பல்வேறு சட்ட மசோதாக்களை இயற்ற அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளதை மறந்துவிடக்கூடாது. காவிரியில் தண்ணீர் திறக்க மேலாண்மை குழு அறிவித்த பின்னரும், கோர்ட்டை நாடுவது கர்நாடக அரசின் தவறான அணுகுமுறை.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயல்பட தவறும்பட்சத்தில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். வருகிற 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே தேர்தலை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.