நாகப்பட்டினம்
பாரத் நெட்வொர்க் மூலம் இணையதள வசதி
|பாரத் நெட்வொர்க் மூலம் இணையதள வசதி
நாகை மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளுக்கு பாரத் நெட்வொர்க் மூலம் இணையதள வசதி செய்யப்படும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாரத் நெட்வொர்க்
மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 193 கிராம ஊராட்சிகளுக்கு 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட உள்ளது. தரைவழியாகவும், மின் கம்பங்கள் மூலமாகவும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள சேவை மையம் அல்லது அரசு கட்டிடங்களில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் வரும் செப்டம்பர்-2023 மாதத்திற்குள் நிறைவு பெறும்.
இதற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள அரசு கட்டிடத்தில் உள்ள அறைகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சித் தலைவர் மூலம் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சுத்தமாக வைத்திருக்காத ஊராட்சிகளுக்கு உடன் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு நலத்திட்ட சேவைகள்
இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி மூலம் பெறப்படும். அரசு நலத்திட்ட சேவைகளை மக்கள் அனைவரும் அவர்கள் வசதிக்கு ஊராட்சியிலேயே முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நிறுவப்படும் உபகரணங்கள் தமிழ்நாடு அரசின் உடமையாகும்.
இவைகளை சேதப்படுத்துதல் மற்றும் திருடுதல் கடும் குற்றம் ஆகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.