திருப்பூர்
மாணவர்கள், இணையவழி விளையாட்டுகளின் தாக்கத்தில் இருந்து விடுபட அரசு நடவடிக்கை
|மாணவர்களிடம் இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் உள்ளதால், அதிலிருந்து அவர்கள் விடுபட அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு ஆசிரியர்கள் இணையவழி மூலம் பதில் அளித்தனர்.
மாணவர்களிடம் இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் உள்ளதால், அதிலிருந்து அவர்கள் விடுபட அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு ஆசிரியர்கள் இணையவழி மூலம் பதில் அளித்தனர்.
ஆசிரியர் பணித்திறன்
கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் கலந்தாலோசிப்பதன் மூலமாக தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை கண்டறிந்துள்ளது.
அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனரின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி அறிவுரைப்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள குறுவள மைய தலைமைப்பள்ளிகளில் ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனை கூட்டங்கள் நடந்தது.
இதில் குறுவளமையத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தன. அப்போது 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கற்பிக்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்களில் பாடங்களுக்கு தனித்தனி வகுப்பறைகளில் கலந்தாலோசனைக்கூட்டம் நடந்தது.
இதேபோன்று 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார வள மையங்களில் (மேல்நிலைப்பள்ளி) தமிழ், ஆங்கிலம், கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல், பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கு பாடவாரியாக தனித்தனி வகுப்பறைகளில் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது.
கலந்துரையாடல்
இந்த கூட்டங்களில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையில் உள்ள கற்றல் இடைவெளியை குறைப்பதற்குத்தேவையான முன்முயற்சியாக, முன்மாதிரியான ஆசிரியர்களின் அனுபவங்களை, ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கலந்துரையாடினர்.
மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் இருப்பதால், அந்த பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கு அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், இணையவழி விளையாட்டுகளின் தாக்கம் தொடர்பான கேள்விகளுக்கு ஆசிரியர்கள், தங்களது இ.எம்.ஐ.எஸ். (கல்வியியல் மேலாண்மை தகவல் தொழில்நுட்பம்) மூலம் பதில் அளித்தனர்.
உடுமலை கல்வி மாவட்டத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டங்களை திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், முதுநிலை விரிவுரையாளர்கள் விமலாதேவி, சரவணக்குமார், பாபிஇந்திரா, சுப்பிரமணியம் மற்றும் விரிவுரையாளர்கள், உடுமலை மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி, பள்ளி ஆய்வாளர் கலைமணி, உடுமலை வட்டாரகல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினர்.