தேனி
தேனி மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா
|தேனி மாவட்டத்தில் சர்வதேச யோகா தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சர்வதேச யோகா தின விழா தேனி மாவட்டத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் யோகா பயிற்சி முகாம் நடந்தது.
தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் போலீசாருக்கான யோகா பயிற்சி வகுப்பு தேனி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் இதில் பங்கேற்று பல்வேறு யோகா பயிற்சிகள் செய்தனர்.
அதுபோல், மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா தலைமை தாங்கினார். அங்கு நடந்த யோகா பயிற்சியில் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்ட தபால் துறை சார்பில் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் யோகா பயிற்சி நடந்தது. இதில் தேனி கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் பரமசிவம், போடி உட்கோட்ட அலுவலர் மருதபாண்டி, மின்வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். யோகா பயிற்சியாளர் ஆனந்த் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.