பெரம்பலூர்
உலக மகளிர் தினம்
|பெரம்பலூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தில் உயர்ந்த பதவிகளில் பெண்கள்
பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உயர்ந்த பதவிகளில் பெண்களே பதவி வகிக்கின்றனர்.
இதில் முதன்மை நீதிபதி பதவியில் பல்கீஸ், மாவட்ட கலெக்டராக கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வருவாய் அலுவலராக அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக லலிதா, வருவாய் கோட்டாட்சியராக நிறைமதி உள்ளிட்ட பலர் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து சாதனை படைத்து வருகின்றனர். இதனால் நீதித்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீஸ் அலுவலகம் ஆகியவற்றில் பெண்கள் தான் உயர்ந்த பதவியில் பணிபுரிகிறார்கள் என்ற பெருமையை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பதவிகளிலும் பெண்களை அதிகம் பதவி வகிக்கிறார்கள்.
கேக் வெட்டி கொண்டாடினர்
நேற்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், மருத்துவமனைகள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஒரு சில தனியார் பள்ளி, கல்லூரிகளிலும், போலீஸ் நிலையங்கள், உழவர் சந்தை ஆகியவற்றில் உலக மகளிர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் உள்ளிட்டோர் மற்றும் பணிபுரியும் பெண் அலுவலர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினரை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பொதுவாக ஒரு கேக் வாங்கி கொடுத்து, அவர்களை கேக் வெட்ட செய்து மகளிர் தினத்தை கொண்டாட செய்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் தங்களது தோழிகளுக்கும், ஆண்கள் தங்களது பெண் தோழிகளுக்கும் செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள், கவிதைகளை பரிமாறி கொண்டனர். பலர் தங்களது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதை, திரைப்பட பாடல்களை வைத்திருந்தனர்.