< Back
மாநில செய்திகள்
சென்னையில் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு; காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் பேச்சு
மாநில செய்திகள்

சென்னையில் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு; காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் பேச்சு

தினத்தந்தி
|
24 March 2023 4:28 AM IST

சென்னையில் சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

சென்னை,

தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு குறித்த மாநாடு ''உமாஜின் சென்னை'' என்ற பெயரில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வரவேற்புரையாற்றினார். இதில் மேற்கத்திய ஆஸ்திரேலியா நாட்டின் மந்திரி ஸ்டீபன் டாசன், சர்வதேச பாரத் பயோடெக் இணை நிர்வாக இயக்குனர் சுஜித்ரா எல்லா, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களின் டைரக்டர் ஜெனரல் அரவிந்த் குமார், மற்றும் பல்வேறு நாட்டு தூதர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசியதாவது:-

கனவு

தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எத்தகைய முன்னேற்றத்தை அடைகிறதோ? அதே தொழில்நுட்ப வளர்ச்சியானது, அதே வேகத்தில் தமிழ்நாட்டிலும் உருவாகவேண்டும் என்பதுதான், என்னுடைய கனவு.

1996-ம் ஆண்டே கம்ப்யூட்டர் துறையை தமிழ்நாட்டின் தளமாக ஆக்கினார், அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி. ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்காவான டைட்டல் பார்க்கை சென்னையில் தொடங்கியவரும் அவரே. இதைத்தொடர்ந்து கோவையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. தனியார் கூட்டுறவோடு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் தொடங்கப்பட்டன. இதன் வெற்றியானது அந்த துறையை மேலும் மேலும் வலுப்படுத்தி தகவல் தொழில் தடத்தை மேம்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக சென்னை, கோவை மற்றும் ஒசூரில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தொடங்கியுள்ளது.

உலகை வெல்வதற்கான கருவி

தொழில்நுட்பம் தான், உலகை வெல்வதற்கான சரியான கருவி. அதனால்தான் தொழில்நுட்பத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்த நினைக்கிறோம். தொழில்நுட்பத்தில் சிறந்த வலிமையான மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், புதுப்புது தொழில்நுட்பங்களுக்காக வாய்ப்புகளை கண்டறிவதிலும், அவற்றை தொடர்ந்து அளித்திடவும் அரசு துறைகள் ஓய்வின்றி உழைத்து வருகின்றன.

அனைத்து தொழிற்சாலைகளின் பங்களிப்போடு, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை எட்ட வேண்டும் என்று நாம் தீர்மானித்துள்ளோம். மென்பொருள் சேவைகளை பொறுத்தவரையில், அந்த துறையில் உலகளாவிய வகையில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். இந்தியாவில் அந்த துறைகளில் பெரும் வெற்றி பெற்ற நிறுவனங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்கள் தொடங்கப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய தொழில் மையங்கள் துறையில் தமிழ்நாடு ஏற்கனவே 10 சதவீதத்துக்கும் மேலாக பங்களித்து வருகிறது. 1300-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் இந்த துறையில் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் சிறந்த கல்வி நிறுவனங்களை பெற்றுள்ளோம். உலகளாவிய வர்த்தக சூழலுக்கு தேவையான ஆற்றல்மிகு வல்லுநர்களை பெற்றுள்ளோம். இதனை மேலும் பலப்படுத்த இந்த மாநாடு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழில்நுட்ப நகரங்களில் வீடுகள்

மாநாட்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட, 3 தொழில்நுட்ப நகரங்கள் என்ற அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டிருந்தார். ஒரே நேரத்தில் சென்னை, ஓசூர், கோவையில் அமைவது என்பது மிகப்பெரிய முயற்சி. உலகத்தரத்திலான வசதிகளுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளுடன் புதிய தொழில்நுட்ப நகரங்கள் அமைய உள்ளன. புதிதாக அமைய உள்ள தொழில்நுட்ப நகரங்களில் வீடுகளையும் கட்டமைத்துத் தர அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு வந்தாரை வாழவைக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழ்நாட்டின் முழக்கமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு யார் வந்தாலும், அவர்களை தமிழ்நாடு உறவினர்களாகவே கருதும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியின் இறுதியில், 'எல்காட்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜான் லூயிஸ் நன்றி கூறினார்.

கண்காட்சி அரங்குகள்

அதனைத்தொடர்ந்து சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்பம், தொழில் முனைவோர், திறன் மேம்பாடு குறித்த கண்காட்சி அரங்கையும், அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். இதில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

3 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சியில் 18 நாடுகளின் பிரதிநிதிகள், 291 உயர்நிலை வல்லுனர்கள் கலந்து கொண்டு, 130 கருத்தரங்குகளில் பங்கேற்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உலகளவில் இருக்கக்கூடிய தொழில்நுட்ப சூழல், பெண்களின் தலைமைத்துவம், காலநிலை மாற்றத்தை தொழில்நுட்பத்தால் எப்படி வெல்வது? என்பது உள்பட பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில்முனைவோர், ஆராய்ச்சி வல்லுனர்கள், கல்லூரி மாணவர்கள், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுத்தி கொண்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்