< Back
மாநில செய்திகள்
நிலவில் சர்வதேச விண்வெளி மையம் -மயில்சாமி அண்ணாதுரை தகவல்
மாநில செய்திகள்

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் -மயில்சாமி அண்ணாதுரை தகவல்

தினத்தந்தி
|
28 July 2024 7:49 AM IST

நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்க ஆராய்ச்சி நடந்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். தொடர்ந்து அவர் 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 3 லட்சம் தானியங்கி வங்கிகள் உள்ளது. இவற்றையெல்லாம் இணைப்பது செயற்கைக்கோள்கள் தான். இந்த செயற்கைக்கோள் எப்போதும் பத்திரமாக இருக்க வேண்டும். அதன் தர நிர்ணயம் சிறப்பாக இருந்தாக வேண்டும். செயற்கைக்கோள்கள் எல்லாம் திரும்பத்திரும்ப செய்யும் போது ஆராய்ச்சி மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு சிரமமாகும்.

அதனால் அதன் பணியை தனியாருக்கு கொடுக்க முயற்சிக்கிறார்கள். இதில் ஒருபக்கம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்தியாவை போல் பல நாடுகளும் செயற்கைக்கோள் உபயோகிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் நாம் செயற்கைக்கோள்களை தயாரித்து வழங்கும் வாய்ப்பு உருவாகும். அதனால் ஆராய்ச்சி மனப்பான்மையுடன், வர்த்தக ரீதியான வாய்ப்புகளும் உருவாகும். வர்த்தக ரீதியாக உருவாக்கப்படும்போது அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கமுடியும்'' என்றார்.

மேலும் செய்திகள்