தூத்துக்குடி
சர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
|சர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுளளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திறனாய்வு போட்டி
2024-ம் ஆண்டுக்கான சர்வதேச திறனாய்வு போட்டிகள் பிரான்ஸ் நாட்டிலுள்ள லியான் நகரில் 2024 செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதன் முதற்கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் கல்வி நிறுவனங்களில் பயில்வோர், தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோர் என மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 01.01.1999 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆண், பெண் ஆகிய இரு பாலரும் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.
அவகாசம் நீட்டிப்பு
55 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஐ.டி.ஐ. பயிற்சியாளர்கள், பள்ளி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த நர்சிங் கல்லூரி போன்ற கல்லூரிகளில் பயில்வோர் மற்றும் பயின்று முடித்தவர்கள் மற்றும் தனி நபர் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் www.naanmudhalvan.tn.gov.in/tnskills என்ற இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் வருகிற 7.7.2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.