அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை தொடங்குகிறது
|பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை தொடங்குகிறது.
திண்டுக்கல்,
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. மாநாட்டை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் 'தமிழ்க்கடவுள்' முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு குறித்த கருத்தரங்குகள், முருகனின் புகழ் குறித்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தல், மாநாட்டு மலர்- விழா மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதோடு முருகனின் புகழ் தொண்டு ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கியும் கவுரவிக்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களை பரவசமூட்டும் வகையில் காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள், பொதுமக்களுக்கு தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. இதற்காக உணவு அருந்தும் கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு முருகனின் ராஜஅலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்தசஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 60 ஆயிரம் பிரசாத பைகள் தயார் செய்யப்படுகிறது. மாநாட்டில் அமைச்சர்கள், ஆதீனங்கள், நீதிபதிகள், வெளிநாட்டினர் என முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் பழனியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.