மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா - பார்வையாளர்களை கவர்ந்த வண்ணமயமான பட்டங்கள்
|மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சரவ்தேச பட்டம் விடும் திருவிழாவில் வண்ணமயமான ராட்சத பட்டங்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
செங்கல்பட்டு,
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் பட்டம் விடும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்த மாமல்லபுரத்தில், அடுத்ததாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைறுகிறது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் 13-ந்தேதி(நேற்று) முதல் 15-ந்தேதி வரை 'சர்வதேச பட்டம் விடும் திருவிழா' நடத்தப்படுகிறது. இதில் வெளிநாட்டில் இருந்து 4 குழுக்களும், இந்தியாவில் இருந்து 6 குழுக்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தொடங்கிய இவ்விழாவில் திருவள்ளுவர் சிலை வடிவில் பட்டம் பறக்க விட்டனர். மேலும் பல்வேறு வடிவிலான சிறிய மற்றும் ராட்சத பட்டங்களை வானத்தில் பறக்க விட்டனர். சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள், சூப்பர்மேன், டிராகன், ஆக்டோபஸ் என பல்வேறு வடிவங்களில் வண்ணமயமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.
மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்களைக் கொண்ட பட்டங்கள், மூவர்ண பட்டங்கள் ஆகியவையும் இதில் பெற்றன. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவைக் காண மாமல்லபுரத்தில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர்.