கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூடுதல் ஒன்றை சேர்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ரசிகன் என்ற முறையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதியை சேர்த்துகொள்கிறேன். விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மேற்கோள்காட்டிய படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக கோவையில் அமைய உள்ள மைதானம் தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச மைதானமாக அமையும். விளையாட்டு திறனை ஊக்குவிப்பதிலும், தமிழ்நாட்டில் விளையாட்டு துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.