மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த சர்வதேச செஸ் வீரர்கள்...!
|மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்களை சர்வதேச செஸ் வீரர்கள் பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 10-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 186 சர்வதேச நாடுகளை சேர்ந்த 2000 செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் செஸ் போட்டிகள் நிறுத்தப்பட்டு செஸ் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு நாளை கழிக்கும் வகையில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உள்ள பல்வேறு நாடுகளை செஸ் வீரர்கள் இன்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.
பின்னர், சுற்றுலா வழிகாட்டிகளிடம் வெளிநாட்டு செஸ் வீரர்கள் கடற்கரை கோவிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். இறுதியில் கடற்கரை கோவிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர்கள் தங்கள் நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் அங்கு குழு, குழுவாக நின்று தங்கள் செல்போன் மூலம் புகைப்படம், செல்பி எடுத்து கொண்டனர்.
இதேபோன்று பல்வேறு நாட்டு செஸ் வீரர்களுடன் கடற்கரை கோவிலுக்கு குவைத் நாட்டை சேர்ந்த செஸ் வீரர்கள் 2 பேர் சுற்றி பார்க்க வந்தனர். அவர்கள் அங்குள்ள சிற்பங்களை சுற்றி பார்க்கும்போது 1 மணி அளவில் அவர்களுடைய தொழுகை நேரம் நெருங்கி விட்டதால், கடற்கரை கோவிலின் புல்வெளி மைதானத்தில் குவைத்தை சேர்ந்த 2 செஸ் வீரர்களும் தொழுகையில் ஈடுபட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.