தமிழக கோவில்களில் உள்பிரகாரத்தில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|தமிழக கோவில்களில் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறற உள்ளது. 30-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி அளிக்கவில்லை. எனவே,
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருப்பதி கோயிலில் உள்ளது போன்ற கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் கோவில் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோவிலின் வெளியே நடைபெற வேண்டும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
மேலும் மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை நவம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.