சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...!
|சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 3-வது நாளாக போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது.
சென்னை
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தி.மு.க. அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையிலும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் (டி.பி.ஐ. வளாகம்) இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். அவர்களிடம் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர் லா உஷா, போராட்டம் நடத்தும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தலைமை செயலகத்திற்க சென்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருடன் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.