கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை - பெற்றோர் கைது
|தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா இருவரையும் போலீசார், கைது செய்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண், மாற்று சமூகத்தை சேர்ந்த நவீன் என்ற இளைஞரை காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் அறிந்த பெண்ணின் பெற்றோர் சமாதானம் ஆனதாக கூறி, ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து சென்று வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி ஐஸ்வர்யா மர்மமாக உயிரிழந்தார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், ஐஸ்வர்யாவின் உடலை அவரது பெற்றோர் மயானத்தில் வைத்து எரித்தனர். இதுதொடர்பாக ஐஸ்வர்யாவின் கணவர் நவீன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
15 மணி நேரம் மேற்கொண்ட விசாரணையில், ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர் கடுமையாக தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.