< Back
மாநில செய்திகள்
இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
23 Sept 2023 2:20 AM IST

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தடை கேட்டு அந்த சங்கத்தின் உறுப்பினர் எம்.சி.சபேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 'சங்கத்தின் விதிகளுக்கு எதிராகவும், சங்கத்தின் நிரந்தர மற்றும் ஆயுட்கால உறுப்பினர்களின் அனுமதியை பெறாமலும், முறைகேடான முறையில், தற்காலிக மற்றும் இணை உறுப்பினர்கள் வாக்களிக்கலாம் என்று உறுப்பினர்களின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. சங்கத்தின் வரவு-செலவு கணக்கையும் முறையாக தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

பொதுக்குழு

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜோதிகுமார் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தின் விதிகளை முறையாக திருத்தம் செய்தபின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் மனுதாரர் கடந்த 2-ந் தேதி மனு கொடுத்துள்ளார். அதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி, கடந்த ஆகஸ்டு 13-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இணை மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் தேர்தலில் ஓட்டு போடலாம். ஆனால், தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறியுள்ளார்.

முகாந்திரம்

ஆனால், இதற்கான விதிகளுக்கு முறையான ஒப்புதலை தொழில்சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் ஆகியோரிடம் இதுவரை பெறவில்லை. அதனால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தில் கூறும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடைபெற உள்ள தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்