தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
|தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கம்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும். இரு தேர்வுகளும் தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும்.
இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் - 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் ஆக இருக்கும். அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த முறையில்தான் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போதைய தேர்வு அறிவிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு என கூறப்பட்டுள்ளது. இந்த முறையை ரத்து செய்து 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் முறைப்படியே இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளை மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டுது. இந்த மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது.
இதில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தவும் மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.