நீலகிரி
நீலகிரி சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை
|மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலியாக நீலகிரி சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலியாக நீலகிரி சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள்
தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் பந்தலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை தேயிலை தோட்ட அலுவலகத்திற்குள் மாவோயிஸ்டுகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கு மலையாளம், தமிழ் மொழியில் துண்டு பிரசுரங்களை ஒட்டி விட்டு சென்றனர். இதனால் அச்சம் தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பு வழங்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கேரள தண்டர்போல்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பமலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவோயிஸ்டுகள் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே வயநாடு மக்கிமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் கோரிக்கைகளை மலையாளத்தில் எழுதி, அங்கிருந்தவரின் செல்போனை வாங்கி புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
கேரளாவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், இருமாநில போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சேரம்பாடி அருகே சோலாடி, தாளூர், பாட்டவயல், நாடுகாணி சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்த பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் பாட்டவயல் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீலகிரிக்குள் வரும் வாகனங்களை சோதனை செய்த விவரங்களை பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறும்போது, தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதால், நீலகிரியில் உள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும். தீவிர சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.