தமிழகத்தில் விடிய, விடிய தீவிர வாகன சோதனை- கணக்கில் வராத ரூ.2 கோடி சிக்கியது
|தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சூழலில், சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியுள்ளது.
சென்னை,
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இது போன்று 702 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என்ற அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், எட்டு மணி நேரம் அடிப்படையில், மூன்று ஷிப்ட்டாக பணிபுரிவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற பூக்கடை உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பைகளில் வைத்திருந்த கட்டுக்கட்டான பணத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் யாசர் அராபத் என்பவர், குணா ஜெயின் மற்றும் மற்றொரு நபருக்கு பணம் கொடுக்க வந்தது தெரியவந்தது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வழங்கும் அறிவுறுத்தலின்பேரில் பணத்தை கொடுக்க வந்ததாக யாசர் அராபத் தெரிவித்தார்.
இதேபோல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை ரூ.2 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.