< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைத்து காளைகளுக்கு தீவிர பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைத்து காளைகளுக்கு தீவிர பயிற்சி

தினத்தந்தி
|
25 Dec 2022 7:02 PM GMT

குளித்தலை அருகே கந்தன்குடியில் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைத்து காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஏறு தழுவுதல் என்பது ஆதி காலத்தில் இருந்தே தமிழர்களின் மரபு வழி வந்த வீர விளையாட்டு. சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏறு தழுவுதல் நடந்ததற்கான சான்றுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் மாட்டை அடக்கும் வீரர்களுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பெரும்பாலும் தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படும் பொங்கல் தினத்தன்று இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தில் இன்றளவும் அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல், கூலமேடு, காரிமங்கலம், அவனியாபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பெயர் போனவை. வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளைகளை வாடி வாசலுக்கு வெளியே சூழ்ந்திருக்கும் இளைஞர்கள் அடக்க முற்படுவார்கள்.

வாடிவாசல் மூலம்...

ஜல்லிக்கட்டு விளையாட்டில் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்படுவதும், திறந்த வெளியில் காளைகள் அவிழ்த்து விடப்படுவதும் உண்டு. வட மஞ்சுவிரட்டு என அழைக்கப்படும் விைளயாட்டில் காளைகளின் கழுத்தில் தென்னை மற்றும் பனை மரத்தின் கிளைகளில் இருந்து நாறு தயாரித்து (வடக்கயிறு) அதை மாட்டின் கழுத்தில் கட்டி அந்த வடத்தின் நுனியை பெரிய மைதானத்தின் நடுவில் உள்ள கம்பத்தில் கட்டி மாட்டை தொட்டு விளையாடும் விளையாட்டும் பல கிராமப் பகுதிகளில் நடத்தப்படுகிறது. இதில் பெரும்பாலும் பல ஊர்களில் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டுகளே நடந்து வருகிறது.

மிகப்பெரிய போராட்டம்

ஜல்லிக்கட்டில் காளைகளும், அதை அடக்கும் வீரர்களும் காயம் அடைவது சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வுகளை காரணம் காட்டி விலங்குரிமை அமைப்புகள் மூலம் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது , அனைவரும் அறிந்த ஒன்று இந்த போராட்டத்திற்கு பின்னர் ஜல்லிக்கட்டில் ஆர்வம் காட்டி ஏராளமானோர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது பெருமையான விஷயமாக கருதப்படுகிறது. நகரப் பகுதிகளை விட கிராமப் பகுதிகளிலேயே காளைகளை வளர்க்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. மாடுகளை எப்படி வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்களோ அதே போல வாடி வாசலில் இருந்து வெளிவரும் காளைகளை பிடிக்க இளைஞர்களும் பயிற்சி பெறுகின்றனர். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வில் இரண்டற கலந்த உணர்வு. ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது என்றாலே காளைகளை வளர்ப்பவர்களும் காளைகளை அடக்குபவர்களும் ஆர்வத்தின் உச்சிக்கே சென்று விடுகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு சிறந்த முறையில் பல்வேறு வகையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. போட்டிக்கு தயார் செய்யப்படும் காளைகளுக்கு பல்வேறு வகையான சிறந்த உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

சிறப்பு பயிற்சி

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குட்பட்ட ராசாண்டர் திருமலை எனப்படும் ஆர்.டி. மலை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் ஊர்களில் ஒன்று. பொங்கல் பண்டிகையொட்டி இவ்வூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளைகளை பங்கேற்க வைக்கவும், காளைகளை அடக்கவும் குளித்தலை பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காளைகளையும் தங்களையும் தயார்படுத்தி வருகின்றனர்.

அதில் சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட கந்தன்குடி என்ற ஊரில் இளைஞர்கள் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

வாடிவாசல் போன்று அமைப்பை உருவாக்கி அதன் வழியாக காளைகளை வெளியேறச் செய்தல், நீச்சல், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை காளைகளுக்கு கொடுக்கின்றனர். அதுபோல வாடிவாசலில் இருந்து வெளியே வரும் காளையை அடக்க எவ்வாறு நிற்க வேண்டும், எப்படி பிடிக்க வேண்டும். என்பது போன்ற பயிற்சிகளும் இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

வாரம் ஒரு முறை பயிற்சி

இதுகுறித்து கந்தன்குடி பகுதியை சேர்ந்த ரகுமான் கூறியதாவது:-

நான் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறேன். பல ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளைக் கொண்டு சென்று பல இடங்களில் பரிசுகள் வென்றுள்ளோம். அதுபோல காளைகளை அடக்கியும் பரிசு பெற்றுள்ளோம். நான் காளை வளர்ப்பதை பார்த்து குளித்தலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் வீட்டில் காளைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில் குறிப்பாக குளித்தலை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான அய்யர்மலை, கந்தன் குடி, வரவூர், கழுகூர், வேங்காம்பட்டி, நச்சலூர் போன்ற ஊர்களில் சுமார் 30- க்கு மேற்பட்ட காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு காளைகள் நீண்ட தூரம் அழைத்து செல்வதற்கும், அதிக நேரம் காளைகள் நின்று தாக்குப் பிடிக்க நடை பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகளுக்கு உணவாக அரைத்த பருத்தி, புண்ணாக்கு வகைகள், உளுந்தம் போட்டு, துவரம் தூசி, பாதாம், பிஸ்தா போன்றவை வழங்கப்படுகிறது.

கந்தன்குடி கிராமத்தில் வாரம் ஒரு முறை மாடுகளுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்பது என்பது குறைவாகவே உள்ளது. அதிக அளவில் பலர் நாட்டு மாடுகளை வளர்க்க முன் வர வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகள் மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வாங்கி வளர்க்கப்படுகிறது. சுமார் ரூ.4 ஆயிரம் முதல் நல்ல ஜல்லிக்கட்டு மாடுகளை வாங்க முடியும். 10 முதல் 15 ஆயிரம் வரை கன்றுக்குட்டிகளை வாங்கலாம். கன்று குட்டியிலிருந்து மாட்டை வளர்ப்பது மிகவும் சுலபம் அது வளர்ப்பவர்களின் பேச்சை கேட்டு கட்டுப்படும். பெரிய காளைகள் வாங்கப்படும் பொழுது அவற்றுக்கு முறையான பயிற்சி அளித்து பழக்கப்படுத்தி விடுவோம். எங்கள் பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடு பிடிக்கும் வீரர்கள் உள்ளனர் என்றார்.

இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்

அய்யர்மலை பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

நான் மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். குளித்தலை அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறேன். எங்கள் ஊரில் காளைகள் வளர்த்து வந்தேன். குளித்தலை கிராமப் பகுதியில் வசித்து வரும் காரணத்தினால் எனது காளைகளை இங்கு கொண்டு வந்து வளர்த்து வந்தேன் என்னிடம் உள்ள காளைகளை பார்த்த இச்சுற்று வட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் பலர் காளைகளை வளர்க்க முன்வந்தனர். தற்போது இப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இருக்கின்றன.

ஜல்லிக்கட்டு போட்டி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே காளைகளுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சிக்காக அவிழ்த்து விடும் காளைகள் எந்த வகையிலும் பொது மக்களை காயப்படுத்தி விடாமல் இருக்கமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறுகள் உடனேயே அவிழ்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்