< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க தீவிர கண்காணிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

தமிழகத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க தீவிர கண்காணிப்பு

தினத்தந்தி
|
30 May 2022 1:30 AM IST

தமிழகத்தில் குரங்கு காய்ச்சலை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

திருச்சி:

அரசு மருத்துவமனையில் ஆய்வு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சை பிரிவில் ஒவ்வொரு படுக்கையும் தலா ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் மொத்தம் 32 படுக்கைகள் அமைந்துள்ளதை நேற்று பார்வையிட்டார். இதில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறியவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

இதனை தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

குரங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதிக்கு பிறகு கொரோனா இறப்பு இல்லை. பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறோம். 93 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 80 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகம் மற்றும் இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பதிவாகவில்லை. இந்த நோய் குறித்த கண்காணிப்பு தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி உள்பட பல்வேறு விமான நிலையங்களில் குரங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் முறை

அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு எழுகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் எழாதவாறு வருகை பதிவு நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் மருத்துவமனையில் டாக்டர்கள் வராமல் இருந்தால் நோயாளிகளே புகார் செய்யலாம். தவறு செய்யும் டாக்டர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

செல்போனை வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்டர்நெட் அடிக்சன் மையம் திறக்கப்பட்டு, ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவ முகாமில் செவிலியர்கள் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. அதேநேரம் 2,400 செவிலியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்.ஆர்.பி. மூலம் வரக்கூடிய செவிலியர்களை பயன்படுத்தி வருகிறோம். வருங்காலத்தில் தேவை அடிப்படையில் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப எம்.ஆர்.பி. மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் கொள்கையின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் மீதமுள்ள பெரம்பலூர் உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்