சென்னை
தரமணி - சோழிங்கநல்லூர் இடையே விரைவில் மெட்ரோ ரெயில் பணிகள் 2025-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள்
|தரமணி - சோழிங்கநல்லூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயிலுக்கான உயர்த்தப்பட்ட பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து கூறியதாவது:-
சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் பணிகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு பிரிவுகளாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகளை வருகிற 2025-ம் ஆண்டுக்குள் முடித்து ரெயில்களை இயக்க திட்டமிட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்தவகையில் தற்போது, மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியில் பழைய மாமல்லபுரம் பாதை வருகிறது. இதில் உள்ள தரமணி நேரு நகர் மற்றும் சோழிங்கநல்லூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட பாதையில் ரெயில் சேவையை அளிப்பதற்கான பாதை மற்றும் 10 ரெயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் லார்சன் ஆண்டு டூப்ரோ நிறுவனத்திற்கு அளித்து உள்ளது. இந்தப்பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளதால் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
நேரு நகர்- சோழிங்கநல்லூர் வழித்தடத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் தரமணி இணைப்பு சாலையின் தெற்கே உள்ள வளைவில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான ரெயில்கள் பரிமாற்ற (இன்டர்சேஞ்ச்) நிலையம் வரை உயர்த்தப்பட்ட வழித்தடம் கட்டுவது அடங்கும். அத்துடன், நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி. காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் 10 உயர்த்தப்பட்ட நிலையங்கள் கட்டும் பணியும் இதில் அடங்கும்.
மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பதற்காக, பணிகள் அனைத்தும் சிறிய, சிறிய பிரிவுகளாக பிரித்து தனித்தனி ஒப்பந்தகாரர்களுக்கு பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு பிரிவில் சிக்கல் இருந்தாலும், அது 2-ம் கட்டத்தின் மற்ற பகுதிகளை பாதிக்காது.
சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மீதமுள்ள பகுதியை கட்டுவதற்கான ஒப்பந்தம் இன்னும் வழங்கப்படவில்லை. சுமார் 3 ஆண்டுகளில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பயணிகள் மெட்ரோ ரெயிலில் எளிதாக செல்ல முடியும். குறிப்பாக, பழைய மாமல்லபுரம் பாதை செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னையில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் நீண்ட நேரம் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பது மற்றும் அலுவலக நேரங்களில் பரபரப்பான போக்குவரத்து மூலம் அலைந்து திரிவது தவிர்க்கப்பட்டு எந்தவித சிரமமுமின்றி செல்ல வேண்டிய தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எளிதாக சென்றடைய முடியும்.
பழைய மாமல்லபுரம் சாலையில் வசிப்பவர்கள் விமான நிலையம் போன்ற இடங்களுக்கு செல்லும் வகையில் ரெயில் நிலையங்களில் ரெயில் மாறி செல்லும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. அதேபோல், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்கள் அல்லது அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி, தரமணி மற்றும் மாதவரத்திற்கும் பழைய மாமல்லபுரம் சாலையில் வசிப்பவர்கள் நேரடியாக ரெயிலில் செல்ல முடியும். தியாகராயநகரில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்ல மயிலாப்பூரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்கள் மாறி செல்ல வேண்டும். அதேபோல், போரூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செல்வதற்கு சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில் மாறி செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.