எண்ணூர் பகுதியில் கடலில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தீவிரம் - சுப்ரியா சாகு தகவல்
|எண்ணெயை அகற்றும் பணியில், எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எண்ணூர் கிரீக் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேவையான ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் எண்ணெய் கசிவை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. எண்ணூர் கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இங்கிருந்து அகற்றப்படும் எண்ணெய் உட்பட அபாயகரமான கழிவுகளை கும்மிடிப்பூண்டியில் உரிமம் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்படும். இந்த எண்ணெய் அகற்றும் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் சில எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சில இடங்களில் மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் எண்ணெய் கழிவுகளையும், சேதமடைந்த பொருள்களையும் அகற்றுவதற்காக தேர்ந்த அனுபவங்களையும் தேவையான இயந்திர வசதிகளையும் கொண்டுள்ள சிறப்பான முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எண்ணெய் அகற்றும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அருகிலுள்ள நாட்டுக்குப்பம் கிராமத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையினால் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பல்லுயிர் இழப்புகளை விரைந்து மதிப்பீடு செய்யும் பணிகளும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.