< Back
மாநில செய்திகள்
சாய்ந்து விழுந்த மின்கம்பம், மரங்களை அகற்றும் பணி தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

சாய்ந்து விழுந்த மின்கம்பம், மரங்களை அகற்றும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
6 Jun 2023 1:10 AM IST

அருப்புக்கோட்டையில் சாய்ந்து விழுந்த மின்கம்பம், மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் சாய்ந்து விழுந்த மின்கம்பம், மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சூறாவளி காற்று

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறாவளிகாற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நெசவாளர் காலனி, சத்தியவாணி முத்து நகர், அஜீஸ் நகர், மணி நகரம், புளியம்பட்டி, பெரியார் காலனி, கலைஞர் நகர் உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. வெள்ளைக்கோட்டை, திருநகரம் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மரங்கள் விழுந்து சேதமடைந்தது.

இதனால் நகர் முழுவதும் மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. சாய்ந்து விழுந்த 300-க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் நகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.

நவீன எந்திரங்கள்

பணிகளை விரைந்து முடிப்பதற்காக விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகராட்சி பணியாளர்களும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர்.

இவர்கள் நவீன எந்திரங்கள் மூலம் சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அதிகம் பாதிப்படைந்துள்ள நெசவாளர் காலனியில் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தும் படியும், கூடுதல் பணியாளர்களை வைத்து பணிகளை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பணிகள் தீவிரம்

அதேபோல் மின்வாரிய பொறியாளர் கண்ணன் முன்னிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மின்வாரிய பணியாளர்கள் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்வயர்களை சீர் செய்யும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டனர். அப்போது முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி, சுகாதார ஆய்வாளர் சரவணன், சரத்பாபு ஆகியோர் உடனிருந்தனர். சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை உடனுக்கு உடன் அகற்றி அப்பகுதியை பழைய நிலைமைக்கு கொண்டு வரும் பணியில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்