12-ம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரம்
|12-ம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் ,கணிதம் ,வேதியியல் ,வணிகவியல் ,இயற்பியல், பொருளியல் ,புள்ளியியல் உட்பட 80 சதவீத பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்டன.
உயிரியல், தாவரவியல் ,வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. இத்துடன் 12 ஆம் வகுப்பு முக்கிய பாடங்களின் பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது . தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டுமே 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே விடைத்தாள்களை மண்டல திருத்துதல் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 12-ம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவதற்குள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல முன்னணி கலை அறிவியல் கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அட்டவணையை வெளியிடும் முன்பே தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.