கன்னியாகுமரி
ரெயில்வே சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி தீவிரம்
|நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்பி கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்பி கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சுரங்கப்பாதை
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு வசதியாக தற்காலிக பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக தண்டவாளத்தின் கீழ் கர்டர் கருவி பொருத்தப்பட்டு காங்கிரீட் அமைக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்தின் கீழே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. பொக்லைன் எந்திரங்கள் மூலமாக கடந்த 15 நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. 8 மீட்டர் அகலத்திற்கு 4½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
கம்பி கட்டும் பணி
பள்ளம் தோண்டப்பட்டதையடுத்து தரையில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை துரிதமாக முடிக்க இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் கம்பி கட்டும் பணி முடிவடைந்து காங்கிரீட் அமைக்கப்படும் என்று தெரிகிறது.
சுரங்கப்பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
---