தேனி
முதல்போக சாகுபடி நடவு பணி தீவிரம்
|கம்பம் பகுதியில் முதல்போக சாகுபடி நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணைமூலம் இருபோக பாசன வசதி பெறுகின்றன. கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், தேனி தாலுகாவில் 2ஆயிரத்து 412 ஏக்கர், போடி தாலுகாவில் 488 ஏக்கர் என 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத்தண்ணீரை பயன்படுத்தி கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்தனர். தற்போது அங்கு நாற்றுகள் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாற்று நடுவதற்கு வசதியாக இரும்பு சக்கரம் (கேஜ்வீல்) பொருத்தப்பட்ட டிராக்டரை வைத்து தொழி சேற்று உழவு மற்றும் காளை மாடுகள் மூலம் பரம்பு அடித்து நடவு செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முதல்போக சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மழை பெய்யாமல் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே செல்கிறது. போதிய நீர் நீர்வரத்து இருந்தால் மட்டுமே நல்ல முறையில் விளைச்சல் ஏற்படும். இதற்கு வருண பகவான் தான் கருணை காட்ட வேண்டும் என்றனர்.