கள்ளக்குறிச்சி
வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரம்
|கள்ளக்குறிச்சி அருகே வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரவார் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அங்குள்ள ஓடையில் தடுப்பணை கட்டும் பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், சமையல் கூடம் கட்டும் பணி மற்றும் சிறுபாலம் கட்டும் பணியை அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு தரமாக உள்ளதா என அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த ஆய்வின்போது வட்டாரவளர்ச்சி அலுவலர் மோகன் குமார், ஒன்றிய உதவி பொறியாளர் ராமு, ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.