< Back
மாநில செய்திகள்
ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
தேனி
மாநில செய்திகள்

ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
2 Sept 2023 1:30 AM IST

போடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரெயில்வே மேம்பாலம்

மதுரையில் இருந்து தேனி, போடிக்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போடி இரட்டை வாய்க்கால் அருகே ெரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரெயில்வே கேட் உள்ளதால் சாலையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று போடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் இந்த ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த பணிக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுமார் 800 மீட்டர் நீளம் கொண்டதாக 23 தூண்களுடன் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கியது. அப்போது 2 தூண்கள் அடிமட்டத்தில் எழுப்பப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஓராண்டாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

அதிகாரிகள் ஆய்வு

இதற்கிடையே நிலம் கையகப்படுத்துதல், 800 மீட்டர் நீளத்தை 851 மீட்டராக அதிகப்படுத்தி மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக திட்ட மதிப்பீடு ரூ.25 கோடியுடன், கூடுதல் நிதியாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டிற்கு பிறகு தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் போடி புதூர் தேவர் சிலை பிரிவு பகுதியில் இருந்து முந்தல் சாலை ஸ்பைசஸ் போர்டு பகுதி வரை 851 மீட்டரில் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் போடியில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை மதுரை கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முருகன், தேனி உதவி கோட்ட பொறியாளர் ரம்யா, போடி உதவி கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்