< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிகளில் இணைய வசதிகள் அமைக்கும் பணி தீவிரம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் இணைய வசதிகள் அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
3 May 2024 12:02 AM IST

பள்ளிகள் திறக்கப்படும்போது, மேம்படுத்தப்படும் அரசு பள்ளிகள் 100 சதவீதம் இணைய வசதியில் இயங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 6 ஆயிரத்து 990 அரசு நடுநிலை பள்ளிகள் மற்றும் 24 ஆயிரத்து 291 தொடக்கப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட உள்ளது.

இந்த சூழலில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஆசிரியர்களுக்கான கையடக்க கணினி பயன்பாடுகளுக்கு இணையதள வசதி அவசியம். ஆனால், கணிசமான அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மட்டுமே இணைய வசதிகள் இருந்தன.

இதன்காரணமாக, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் இணைய வசதிகள் பெறுவதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அறிவுறுத்தி இருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் இணைய வசதி மேற்கொள்ளும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்போது, மேம்படுத்தப்படும் அரசு பள்ளிகள் 100 சதவீதம் இணைய வசதி இயங்கும் வகையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் 8,030 அரசு தொடக்கப் பள்ளிகள், 3,083 அரசு நடுநிலைப்பள்ளிகள் என 11, 113 அரசு பள்ளிகளில் மே 2-ந்தேதி நிலவரப்படி, 100 சதவீதம் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மீதமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் திறக்கப்படும் போது அரசு பள்ளிகள் 100 சதவீதம் இணைய வசதியுடன் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்