காஞ்சிபுரம்
நீர் தடங்களை கண்டறிந்து குடிநீர் ஆதாரமாக்கும் விதமாக காஞ்சீபுரம் கோவில் குளங்களில் புனரமைக்கும் பணி தீவிரம்
|காஞ்சீபுரம் கோவில் குளங்களின் நீர் தடங்களை கண்டறிந்து புனரமைக்கும் பணி துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாநகராட்சி நகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திருக்கோயில் திருக்குளங்களை புனரமைத்து நீர்நிலைகளாக மாற்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக்கும் பணிகளை துவக்கிட மாமன்ற கூட்டத்தில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் பணிகளை துவக்கினார்.
இதில் முதல்கட்டமாக பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சீபுரத்தில் வைகுண்டப் பெருமாள் கோவில் அருகில் படிக்கட்டுகளுடன் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. கனமழை பெய்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் தேங்கவதில்லை. இதனால் இந்த குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. ஏராளமான குடியிருப்புகளுக்கு நடுவில் உள்ள இக்குளத்தில் தண்ணீர் இருந்தால் அருகில் உள்ள வீடுகளில் நீர்ஆதாரமும் பெருகும்.
இதற்காக கடந்த 1980-1990-ம் ஆண்டுகளில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து ரெயில்வேசாலை, வைகுண்டப் பெருமாள் கோயில் சந்நிதி தெரு ஆகிய பகுதிகள் வழியாக பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து மழைநீரை நிரப்பியிருக்கின்றனர். காலப்போக்கில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் மூடப்பட்டு அதன் மேல்பகுதியில் சாலையும் போடப்பட்டிருந்ததால் மழைநீர் குளத்துக்கு வருவது தடைப்பட்டிருந்தது. இதனையறிந்த காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் குளத்துக்கு மழைநீர் வரும் குழாய்களை கண்டுபிடிக்குமாறு பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநகராட்சி பொறியாளர் கணேசன், உதவிப் பொறியாளர் சரவணன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பூமிக்கடியில் செல்லும் குழாய்களை கண்டுப்பிடித்ததுடன் அவற்றின் மூலம் மழைநீர் சீராக செல்லும் வகையில் பொது நிதியிலிருந்து ரூ.15லட்சம் மதிப்பில் மழைநீர் செல்ல உரிய வசதிகளுடன் கால்வாயும் அமைத்தனர்.
பிறகு மாநகராட்சி குடிநீர் லாரி மூலம் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில், குழாய்களிலும் தண்ணீர் தெப்பக் குளத்துக்கு போகிறதா என ஆய்வு செய்தனர்.ஆய்வின் முடிவில் தெப்பக்குளத்துக்கு மழைநீர் செல்வதை உறுதி செய்தனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் தெப்பக்குளத்துக்கு செல்லும் வகையில் குழாய்களை கண்டுபிடித்த அதிகாரிகளை அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனால் மழைக்காலங்களில் இப்பகுதியில் மழைநீர் தேங்கவதும் முற்றிலும் தவிர்க்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக ரங்கசாமி குளம், தீர்த்தவாரி குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்களும் புனரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.