< Back
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்: கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்: கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்

தினத்தந்தி
|
12 Sept 2023 3:40 AM IST

சென்னை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மனைவி சோனியா.

இவர்களுடைய 4 வயது மகன் ரக்சன், டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தான். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் ரக்சன் உயிரிழந்து விட்டதாக சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதற்காக சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பலியான சிறுவனின் வீட்டுக்கு நேரில் சென்று அவனது தாயாருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அப்பகுதி முழுவதும் அவர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள் என வீதி, வீதியாக அந்த பகுதி முழுவதும் சென்று பார்த்தார். சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை முறையாக செய்து கொடுக்கவும், பராமரிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். மேலும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

அபராதம் விதித்தல்

கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2,324 ஒப்பந்த பணியாளர்களும் என மொத்தம் 3,278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்துக்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும், மேல்நிலை தொட்டி, கீழ்நிலை தொட்டி, கிணறு போன்றவற்றில் கொசுபுழுக்கள் இருப்பின் அழித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் 423 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் எந்திரம், 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடங்களிலும், கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் இடங்களிலும், காலி மனைகளில் தண்ணீர் தேங்கியிருந்து அதன் மூலம் கொசு உற்பத்தி இருப்பது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தூய்மையாக பராமரித்தல்

சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்களை எதிர்கொள்ள போதிய அளவு மருந்துகள், உபகரணங்களுடன் போதுமான மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர், பூச்சியியல் நிபுணர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்