கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
|தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மிக்ஜம் புயல் எச்சரிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக கடந்த 3 நாட்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 140 கால்நடைகள் இறந்துள்ளன. 572 குடிசைகள் சேதமடைந்துள்ளன. கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
படகுகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் விமானம் ரத்து காரணமாக பாதிக்கப்படும் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
இன்று மாலை முதல் நாளை மாலை வரை காற்று மழை இருக்கும், இந்த நேரத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும். சென்னையில் 162 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மழையோடு சேர்ந்து காற்றும் இருக்கும் என்பதால் அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். புயல் காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.